ஆட்டையாம்பட்டியில் இருந்து திருமலை திருப்பதிக்கு 18 ஆண்டுகளாக பாதயாத்திரை
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியில் இருந்து, திருமலை திருப்பதிக்கு, 18 ஆண்டுகளாக கண்ணையன் என்ற ராமானுஜதாசர் தலைமையில், ஸ்ரீ பரந்தாமன் பக்தர்கள் குழுவினர், பாதயாத்திரை சென்று வருகின்றனர். திருப்பதிக்கு, பாதயாத்திரை செல்வது குறித்து, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி மணியாரங்காடு பகுதியை சேர்ந்த கண்ணையன், 58, கூறியதாவது:
கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், குடும்பச்சூழலால் ஒரு வேளை சாப்பாடுக்கே, வழியின்றி வறுமையில் வாடினேன். அப்போது, என் வீட்டுக்கு வந்த தாசர் ஒருவர், குடும்பத்துடன் நடைபயணமாக திருப்பதி சென்று வந்தால், கஷ்டங்கள் தீரும் என்றார். அவர் கூறியபடி, ஆட்டையாம்பட்டியில் இருந்து குடும்பத்துடன் நடந்தே, திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை, எனக்கு பசி என்பதே கிடையாது. தினமும், 10 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதியாக இருக்கிறேன். என்னை போல் வேதனைப்படும் அன்பர்களை, திருப்பதிக்கு நடைபயணமாக அழைத்துச் சென்று வருகிறேன். அவர்களும் கஷ்டங்களில் இருந்து, விடுபட்டுள்ளனர். நடைபயணம் செல்வதற்கு முன், பெத்தாம்பட்டி சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, இருமுடி கட்டிக்கொண்டு நடைபயணத்தை துவக்குவோம்.
அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, 4:00 மணி முதல், 10:30 வரை நடைபயணம் செய்து, அருகில் உள்ள கோவில், மடம் அல்லது தாசர் வீடுகளில் தங்கி இளைப்பாறி மீண்டும் மாலை, 5:00 மணிக்கு பயணத்தை துவக்கி இரவு, 11:00 மணி வரை நடப்போம். ஒரு நாளில், 35 முதல், 40 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்று, 10 நாளில் திருப்பதி திருமலைக்கு சென்று, சுவாமி தரிசனம் முடித்து, ரயில் மூலம் சேலத்துக்கு வந்து விடுவோம். பாதயாத்திரை செல்ல துவங்கியது முதல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.