சிதிலமடைந்து வரும் கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் நிறைந்த அமணலிங்கேஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருகிறது. "இக்கோவிலை பாதுகாத்து புனரமைக்க இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் ஊராட்சிக்குட்பட்ட கரப்பாடியில் உள்ள அமணலிங்ககேஸ்வரர் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் சுற்றுச்சுவர், மூலவர் சன்னதி, அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டன. கோவில் சுவர்களில் கல்வெட்டு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இக்கோவிலில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மூன்று லிங்கங்கள் உள்ளன. இவற்றை, பிரம்மா, விஷ்ணு, சிவனாக மக்கள் வழிபடுகின்றனர். பழமையான நந்தி, விநாயகர் சிலைகளும் உள்ளன. ஊரின் நடுவில் இக்கோவில் அமைந்திருந்தாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் பூஜை ஏதும் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் தேவையற்ற செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளித்தது. கிராம மக்கள் இணைந்து, கோவிலை சுத்தம் செய்து கடந்த 15 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்யும் விஸ்வநாதன், வேல்முருகன் ஆகிய இருவரும் மூலவருக்கு தினமும் பூஜை செய்யத்துவங்கினர். அதன்பின், பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியதால், பிரதோஷம், செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கிராம மக்கள் கூறுகையில், "கல்வெட்டுகள் அதிகளவில் உள்ள இக்கோவில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்தாலும் பராமரிப்பு இல்லை. கிராம மக்களிடம் நிதி திரட்டி கோவிலுக்கு தேவையான சில வசதிகளை செய்கிறோம். நீண்ட காலமாக மின்வசதி இல்லாமல் இருந்த இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் மின் வசதி கிடைத்தது. கோவில் வெளி பகுதியில் மின் வசதி இல்லாததால், மாலை நேரத்தில் பக்தர்கள் வருவதில்லை. அரசு மனது வைத்தால், கோவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்றனர். "திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை இந்துசமய அறநிலையத்துறை கிணத்துக்கடவு பகுதி ஆய்வாளர் தனசேகர், கோவில் தக்கார் நாகையா ஆகியோர் கூறியதாவது: இக்கோவில் பழமையானது என்பதால், முழுமையாக புனரமைக்க வேண்டியுள்ளது. அதற்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்க வேண்டும். இது குறித்து அரசுக்கு தெரிவித்து ஒப்புதல் கிடைத்தவுடன்தான் பணிகள் மேற்கொள்ள முடியும். கோவில், புறம்போக்கு நிலத்திலுள்ளதால், தாசில்தாரிடம் உரிய அனுமதி பெற்ற வேண்டியுள்ளது. ஊரிலுள்ள முக்கிய பிரமுகர்கள் உதவியும், கிராம மக்கள் ஒத்துழைப்பும் இருந்தால் முயற்சி மேற்கொள்ள முடியும். கோவிலுக்கு தேவையான முக்கிய திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.