உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் பகல்பத்து விழா, கடந்த டிச., 26 தேதி துவங்கி, ஜன., 4ம் தேதி வரை நடந்தது. விழா நாட்களில், மூலஸ் தானத்திலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளல், அரையர் வியாக்யானச் சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலா, ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு மூலஸ்தானம் சேருதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, ராப்பத்து திருவிழா நேற்று துவங்கியது. விழாவில், முதல் நாளில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 7.35 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. மூலஸ்தானத்திலிருந்து பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக வீதிகளில் எழுந்தருளி, ராப்பத்து மண்டம் சேர்ந்தார். இதன் பின், திருவாய்மொழி துவக்கம், அரையர் வியாக்கியானம், மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, மீண்டும் மூலஸ்தானம் வந்தடைதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் உட்பட, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !