உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு!

காரமடை அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு!

காரமடை:கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி, பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, நாச்சியார் மோகினி அவதாரத்தில், திருவீதியுலா வந்தார்.நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு மூலவருக்கு தலைமை அர்ச்சகர் ரகுநாத அய்யங்கார், திருமஞ்சன பூஜை செய்தார். பின், உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் சேஷ வாகனத்தில், ஆஞ்சநேயர் சன்னிதி முன் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், 5.45 மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் துவங்கியது. 12ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி குதிரை வானத்தில் உற்சவமும், 14ம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்றுமுறையும் நடக்கிறது. தென் திருப்பதியில்...மேட்டுப்பாளையம் அருகே உள்ள, தென்திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வசல் திறக்கப்பட்டது. அதிகாலை 1.00 மணிக்கு ஆதிவராக பெருமாள் திருப்பள்ளி எழுச்சியும், ஸ்ரீவாரி திருப்பள்ளி எழுச்சியும் நடந்தது. 4.20 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்தார். சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக வந்து சுவாமியை வழிபட்டனர். மாலை 5.30 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !