தந்தி மாரியம்மன் கோவில் குண்டம் விழா:பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தீ மிதித்தனர்
குன்னுார்:குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர்.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பூச்சாட்டு, கரக ஊர்வலம், சிம்ம வாகன புறப்பாடு, திருக்கல்யாணம், வேப்பமர கரக ஊர்வலம், சிம்ம வாகனம் மற்றும் காமதேனு வாகன ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, காலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து தந்தி மாரியம்மன் கோவிலுக்கு நடந்த பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். இதன் பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா துவங்கி வி.பி., தெரு பூக்குண்டம் மைதானத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூக்குண்டம் இறங்கினர்.
இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், ஜாதிமத பேதமின்றி அனைத்து மதத்தவர்களும் பக்தி பரவசத்துடன் விரதமிருந்து பூகுண்டம் இறங்கினர். பலரும் கைக்குழந்தைகளுடன் இறங்கினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுன்ட்ரோடு, பஸ் ஸ்டாண்ட், வி.பி., தெரு உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தினர், விவேகானந்தா நற்பணி மன்றத்தினர், தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கத்தினர் மற்றும் பக்தர்களும் செய்திருந்தனர்.