உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி மூடியதால் பக்தர்கள் தவிப்பு!

உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி மூடியதால் பக்தர்கள் தவிப்பு!

கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில்,மரகத நடராஜர் சன்னதி வழக்கத்திற்கு மாறாக இரண்டு மணி நேரம் முன்னதாக பூட்டப்பட்டதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பரிதவித்தனர். ஆண்டு தோறும் சுவாமி உற்சவர் வீதி உலா வந்த பின்னரே சன்னதி திருக்காப்பு இடப்படும். வழக்கத்திற்கு மாறாக நேற்று இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக காலை 11.20 மணிக்கு சன்னதி பூட்டியதால் சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். விசாரிக்க சென்ற பக்தர்களுக்கும் அலுவலகத்தில் முறையாக தகவல் தெரிவிக்காததால் விரக்தி அடைந்தனர். தரிசனத்திற்கு வந்த அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் ஆணிமுத்துவை சந்தித்து உள்ளூர் பக்தர்கள் முறையிட்டனர்.கோயில் திவான் மகேந்திரனிடம் விசாரித்தில், சிவகங்கை அறநிலையத் துறை இணை கமிஷனர் தங்கராஜ் உத்தரவின் பேரில் பூட்டப்பட்டதாக தெரிவித்தார். இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வெளியே நின்று தரிசித்தபடி சென்றனர்.

மரகத நடராஜருக்கு சந்தனம் சாத்தல்: மங்களநாத சுவாமி கோயில் நடராஜர் சன்னதியில், நேற்று மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. மங்களநாதசுவாமி கோயிலில் ஆறடி உயர மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் காலை மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் களையப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று அதிகாலை 12.30 மணி முதல் அபிஷேகம் துவங்கி, அதிகாலை 3 மணிக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோ-பூஜை, கன்னிகா பூஜை, விப்ரபூஜை, பிரம்மச்சாரி பூஜை உள்ளிட்ட பூஜைகளுக்கு பின், ராஜதரிசனம் நடந்தது. மரகத நடராஜரை தரிசிக்க வெளிமாவட்டங்களிலிருந்து எராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !