உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் : மணக்கோல தரிசனத்தில் மாற்றம் இல்லை

மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் : மணக்கோல தரிசனத்தில் மாற்றம் இல்லை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், முக்கிய விழாவான, திருக்கல்யாணம், வரும், 27ல் நடக்கிறது. பழைய திருக்கல்யாண மண்டபத்தில், மணக்கோலத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருள ஏற்பாடுகள் நடக்கின்றன. இக்கோவிலில், பிப்.,2 இரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு கோபுரம் அருகே, வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. புனரமைப்பு பணிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. திருக்கல்யாணம், 27ல் நடக்கிறது. பழைய திருக்கல்யாண மண்டபத்தின் அருகில் இருக்கும், வீரவசந்தராய மண்டபம் பகுதி முழுவதும் தடுப்புகள் வைத்து அடைக்கப்படும். திருக்கல்யாணம் முடிந்ததும், மணக்கோலத்தில் அம்மன், சுவாமி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள, கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. திருக்கல்யாணம் முடிந்த பின், வடக்கு கோபுரம், கிழக்கு கோபுரம், 16 கால் மண்டபம், பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக, பக்தர்கள் வெளியேறவும் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

அலைபேசியில் தேடலாம் : மதுரை சித்திரை திருவிழாவில், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி, வரும், 30ல் நடக்கிறது. இதற்காக, 28ம் தேதி, அழகர்கோவிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். 29ல் மூன்றுமாவடி எதிர்சேவை நடக்கிறது. 30ல் வைகையாற்றில் எழுந்தருளி, இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.மே, 1ல், தேனுார் மண்டபத்தில், மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே, 2ல், சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி, மே, 4ல் கோவிலை, சென்று அடைகிறார். கள்ளழகர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை பக்தர்கள் எளிதாக அறிய மாவட்ட போலீசாரின், மதுரை காவலன் என்ற, செயலியில், டிராக் அழகர் என்ற வசதியை, கிளிக் செய்தால் சுவாமி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். இதனால், தேவையற்ற காலவிரயத்தை தவிர்க்க முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்த வர்கள், அப்டேட் செய்து இவ்வசதியை பெறலாம்.

முன்பதிவு துவக்கம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்தை காண, தெற்கு கோபுரம் வழியாக, 6,000 பேருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. திருக்கல்யாணத்தை காண விரும்பும் பக்தர்கள் இணைய தளம் (http://www.maduraimeenakshi.org/) வழியாக, 500 மற்றும், 200 ரூபாய் கட்டண சீட்டுக்கான முன்பதிவு இன்று முதல், ஏப்., 22 வரை நடக்கிறது. பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன், அலைபேசி வைத்துள்ளோர், மின் அஞ்சல் முகவரி தந்து, முன்பதிவு செய்யலாம்.அலைபேசி இல்லாதோர், மேற்கு சித்திரை வீதி, பிர்லா தங்கும் அறையில், நேரடி முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !