உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா துவக்கம்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா துவக்கம்

உளுந்துார்பேட்டை: கூவாகம், கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா, நேற்று மாலை துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை பெருவிழா, நேற்று சாகை வார்த்தலுடன் துவங்கியது. மாலை, 5:15 மணிக்கு கூவாகம் மற்றும் சுற்றியுள்ள, ஏழு கிராமங்களில் இருந்து, பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படையலிட்டனர். இன்று, பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முக்கிய விழாவான, சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி, மே 1ல் நடக்கிறது.அப்போது, தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கையர், பூசாரிகளின் கைகளால் தாலி கட்டி, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் காலை 6.30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.பந்தலடியில், பகல், 12:00 மணிக்கு நடக்கும் அழுகள நிகழ்ச்சியில், திருநங்கையர் தாலிகளை அறுத்தெறிந்து, விதவை கோலம் பூண்டு, ஊருக்கு திரும்புவர்.அன்று மாலை, 5:00 மணிக்கு உறுமை சோறு படையல், இரவு, 7:00 மணிக்கு காளி கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி விடையாற்றி உற்சவம், 4ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !