உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் சித்திரை பெருவிழா அனைத்து துறை ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றத்தில் சித்திரை பெருவிழா அனைத்து துறை ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை ஒட்டி, அனைத்து துறைகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, இன்று காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த, அனைத்து அரசு துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர், சாந்தி தலைமை வகித்தார். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர், அய்யனாரப்பன், பேரூராட்சி செயல் அலுவலர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கோவில் செயல்அலுவலர் குமரன் வரவேற்றார். காவல் ஆய்வாளர் கூறும் போது, ”தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அன்னதானம் வழங்குபவர்கள், வரிசையில் வழங்கினால், நெரிசல் இல்லாமல் இருக்கும். காவல் துறைக்கு, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்,” என்றார்.

பொதுமக்கள் தரப்பில், அளவுக்கு மீறி விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும். குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சிறப்பு பேருந்து வசதி தேவை என, தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் சங்கத்தினர், ’முக்கிய விழாக்களில் அதிக கூட்டம் காணப்படும். கரகாட்டம் உள்ளிட்ட இரவு நிகழ்ச்சிகளில், முன்னேற்பாடாக, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்’ என்றனர். ’விழாவில், வாண வேடிக்கை கூடாது என, தகவல் வந்துள்ளது. அது உண்மை தானா’ என, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கேட்டார். அதற்கு செயல் அலுவலர், ’துறை ரீதியான அறிவிப்பு வரவில்லை. ஓரிரு நாளில் ஆலோசித்து தெரிவிக்கிறேன்’ என்றார். இந்து முன்னணி அமைப்பினர், ’கழிப்பறைகளில், தண்ணீர் வசதியை சரியாக பார்த்து கொள்ள வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள அசைவக்கடைகளை அகற்ற வேண்டும்’ என்றனர்.

சுகாதார துறையினர்,’விழாவின் அனைத்து நாட்களிலும், கோவில் அருகே மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். நடமாடும் மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்படும். அவசர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மின் வாரிய, உதவி மின் பொறியாளர் கூறுகையில், ’எங்கள் துறை சார்பாக ஏற்கனவே அனைத்து பணிகளையும் செய்துவிட்டோம். கூடுதலாக என்ன செய்ய வேண்டும்  ன்றாலும் செய்ய தயாராக உள்ளோம்’ என்றார். கோவில் செயல் அலுவலர் பேசும் போது, ’சாலையில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில், கோவில் கணக்காளர், விஜயன், காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !