ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் 108 கலசம், வலம்புரி சங்கு பூஜை!
மோகனூர்: ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில் நடந்த, 108 கலசம் மற்றும் வலம்புரி சங்கு பூஜை விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் அடுத்த மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கல்வி, செல்வம், குடும்ப நலன், தொழில் வளம், நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உலக நன்மைக்காகவும், கோவில் திருப்பணி சிறப்பாக நடக்கவும், 108 கலசம், 108 வலம்புரி சங்கு மற்றும் யாக பூஜை கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, அன்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, 108 கலசங்கள் மற்றும், 108 வலம்புரி சங்குகள் பூஜையில் வைக்கும் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு, 108 கலச பூஜையும் துவங்கியது. மதியம் 12 மணிக்கு, மகா தீபாராதனை, 1 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. அதை தொடர்ந்து, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, ராஜநாகலட்சுமி அம்மன் அறங்காவலர்குழு, ஊர் மக்கள் செய்திருந்தனர்.