உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அம்மன் அரசாட்சி துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அம்மன் அரசாட்சி துவங்கியது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சிக்கு நேற்று இரவு 8:00 மணிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தினங்கள் இழைத்த செங்கோல் சாற்றுவிக்கப்பட்டு அம்மன் அரசாட்சி துவங்கியது.விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சைப்பட்டு முண்டாசு, அரக்கு நிறப்பட்டு உடுத்தி சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

தாமரை, ஏலக்காய், ரோஜா மாலைகள் சாற்றுவிக்கப்பட்டன. காப்பு கட்டிய ரமேஷ் பட்டர், ஹாலாஸ் செந்தில் பட்டர் பூஜைகளை நேற்று இரவு 7:40 மணிக்கு துவக்கினர். ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடத்துக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் நடந்தன. இரவு 7:50 மணிக்கு அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றுவிக்கப்பட்டு, ரத்தினங்கள் இழைத்த செங்கோல் அம்மனுக்கு வழங்கி தீபாராதனைகள் நடந்தன.பாண்டிய மன்னனின் நினைவு கூறும் வகையில் அம்மனுக்கு வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பின், செங்கோலை அம்மனிடம் இருந்து பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோல் சமர்ப்பித்தார். இதன்படி சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அரசாட்சி நடப்பதாக ஐதீகம். வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமி மாசி வீதிகளில் எழுந்தருளினார். கலெக்டர் வீரராகவராவ், இணை கமிஷனர் நடராஜன், ஸ்ரீரங்கம் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !