திருநள்ளார் சனிபகவான் கோவிலில் காணிக்கைகள் எண்ணும் பணி துவக்கம்!
காரைக்கால் : திருநள்ளார் சனிபகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவில் வசூலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நாள்தோறும், ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 21ம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் மட்டும், 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து வந்த மூன்று சனிக்கிழமைகளிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த, சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்களில் காணிக்கை நிறைந்ததால், நேற்று முதல் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில், வங்கி மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், உண்டியல் எண்ணும் பணி, 2 நாட்களுக்கு தொடரும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பின், காணிக்கைகளின் விவரம் தெரிய வரும்.