அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பெரிய தேரோட்டம்
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. அவிநாசியிலுள்ள, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத்தேர்த்திருவிழா, கடந்த, 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் யானை வாகன காட்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பூர நட்சத்திரத்தில், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும், கரிவரத ராஜ பெருமாளும் திருத்தேர்களுக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று காலை, காலை, 10:00 மணிக்கு, அவிநாசிலிங்கேஸ்வரர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. இதற்காக தேர்வீதிகளில் சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்புள்ளதால், அன்னதானம், நீர் மோர் பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, ’வாட்டர் பாக்கெட்டுகளை’ பயன்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை, காலை, 10:00 மணிக்கு, கருணாம்பிகை அம்மன் தேர், சுப்ரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் மற்றும் கரிவரத ராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவில், நாளை மறுநாள் தெப்போற்சவம் நடக்கிறது.