திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருநெல்வேலி, திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் இன்று 27 ம் தேதி காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிேஷக பணிகளுக்காக நவ.30ல் பாலாலயம் நடந்தது. 4.92 கோடி ரூபாயில் பணிகள் நடந்தது.
கும்பாபிேஷகத்திற்காக 40 யாக சாலை பீடங்களும், 84 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு பிச்சையாபட்டர், மூர்த்தி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.விக்னேஸ்வர பூஜை, ரக் ஷாபந்தனம், யாகசாலைக்கு புனித நீர் கொண்டு வருதல், கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் துவங்கியது. நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் விசேஷ சாந்தி, 5-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
இன்று ( 27-ந் தேதி ) காலை 7 :00மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கோபுரம், விமானங்கள், மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காலை 9:30 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். தென்மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.