உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்!

ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்!

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கி, வரும் 16ம் தேதிவரை நடக்கிறது. ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன் மற்றும் சின்னகுன்னூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இவ்விழா நடக்கிறது. ஹெத்தையம்மன் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த "சக்கலாத்தி என்ற பண்டிகையில் இருந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். திருவிழா கொண்டாடும் கிராமங்களில் உள்ள கோவிலில் இருந்து நேற்று காலை பக்தர்கள் கலாச்சார உடையணிந்து, குடைகளின் கீழ், அம்மனை "மடிமனை என்றழைக்கப்படும் கோவிலுக்கு அழைத்து சென்றனர். மடிமனைக்கு வந்த பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லாமல், அங்கேயே 8 நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வது ஐதீகமாக உள்ளது. நாள்தோறும் மடிமனையில் காணிக்கை செலுத்துதல் மற்றும் அருள்வாக்கு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, நேற்று கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில், அம்மன் அழைப்பு, அருள்வாக்கு நடந்தது. நாளை பழமை வாய்ந்த பேரகணி ஹெத்தையம்மன் மடிமனையில், திருவிழா நடக்கிறது. இதில், நீலகிரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காணிக்கை செலுத்துகின்றனர்.?பக்தர்களுக்காக அருள்வாக்கு மற்றும் அன்னதானம் நடக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது. முக்கியத் திருவிழா நாளான 15ம் தேதி மடிமனையில் விரதம் இருந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை, கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். 16ம் தேதியும் விழா நடக்கிறது. கிராமத்தில் உள்ள சுத்தக்கல் என்ற கோவில் வளாகத்தில் காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !