குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆண்டாள் திருமணம் கோலாகலம்!
தென்காசி : குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருமணம் சிறப்பாக நடந்தது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பாவை நோன்பு கடைபிடிக்கப்பட்டு ஆண்டாள் திருமணம் கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் தேதி முதல் பாவை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது. நோன்பின் 27வது நாளான நேற்று ஆண்டாள் - ரெங்கமன்னார் திருமணம் நடந்தது. திருப்பாவை, திருவெம்பாவை மாணவிகள் பாடினர். இதனையடுத்து மணமகன், மணமகள் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், மாங்கல்யம் அணிவித்தல், நலுங்கு, பூப்பந்து விளையாட்டு உள்ளிட்ட அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சியை சுந்தராஜ சாஸ்திரி நடத்தி வைத்தார். மணமக்களாக கல்லூரி மாணவிகளே வேடம் அணிந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் விருந்து, மொய் எழுதுதல், கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.