உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் தங்கமயில் வாகனத்தில் வலம் வரும் முருகன்!

தினமும் தங்கமயில் வாகனத்தில் வலம் வரும் முருகன்!

பழநி: தமிழ்க் கடவுளாம் முருகனின் வாகனம் மயில். அந்த முருகனின் கோயில்களில், தைப்பூசம், நவராத்திரி, பெரிய கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி போன்ற முக்கிய விழாக்காலங்களில் வாகன புறப்பாடு இருக்கும். முருகன் வாகனம் மயில் என்பதால், அவர் தங்கமயில் வாகனத்தில் வலம் வருவார். ஆனால் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் முருகன், தினமும் மாலை 6:30 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் வருவார். அவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பழநி மலைக்கோயிலில் மாலை 5:30 சாயரட்சை பூஜையில் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்கின்றனர். அதன்பின் இரவு 7:00 மணி தங்கரதப் புறப்பாடுக்கு முன்பாக மாலை 6:30 மணிக்கு பாரவேல் மண்டபத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ரூ. 2 ஆயிரம் கட்டணம் செலுத்தினால், ஐந்துபேருக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கு கோயில் சார்பில் மாலை, மரியாதை செய்து பஞ்சாமிர்தம், விபூதி, பழங்கள் அடங்கிய பிரசாத பை வழங்கப்படுகிறது.

அதே தரிசனத்தில் நிரந்தர கட்டளை வைப்புத் தொகையாக ரூ. 22 ஆயிரம் செலுத்தினால், ஆண்டு தோறும் பக்தர்கள் விரும்பும், பிறந்தநாள், திருமணநாள் போன்ற நன்னாள் ஒன்றில் தங்கமயிலில் வரும் முருகனை தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்குபவர். அப்புறம் என்ன, ஆண்டியாக இருந்து உங்களை அரசனாக்கும் ஐங்கரன் தம்பியை தரிசனம் செய்ய கிளம்பிட்டீங்கதானே. கோடை விடுமுறை நாளில் குடும்பத்தோடு சென்று ரூ. 2 ஆயிரம் செலுத்தி ஒருமுறையாவது ‘தகதக ’ வென மின்னும் தங்கமயிலானை தரிசனம் செய்து பாருங்களேன். இது தொடர்பாக 04545 - 242 236ல் பேசலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !