காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை விழா நிறைவு
சென்னை: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், சிறப்பு நவகலச அபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நேற்று நிறைவு பெற்றது. சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரைப் பெருவிழா, ஏப்., 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபையில் அம்பாளுடன், சிவபெருமான் அருள் பாலித்தார். மூன்றாம் நாள் விழாவில், அதிகார நந்தி சேவை நடந்தது. விழாவின், பிரதான நாளான, ஏப்., 26ம் தேதி, தேர் திருவிழாவும், 8ம் நாள் விழாவில், சோமாஸ்கந்தர் ரிஷப வாகன காட்சியும், அம்பிகை திருஞான சம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டி அருளல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின், 10ம் நாள்உற்சவமான, ஏப்., 29 அன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடைசி நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, உற்சவ சாந்தி, சிறப்பு நவகலச அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, வெள்ளை யானை மேல், திருமுறை திருவீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு தேவார இன்னிசை யுடன், சித்திரை பெருவிழா நிறைவு பெற்றது.