பெருமாள் கோவிலில் நாளை கூடாரவல்லி விழா கோலாகலம்
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், நாளை (12ம் தேதி) கூடாரவல்லி திருவிழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் காவிரி ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் கூடாரவல்லி திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள் மற்றும் பெருமாள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு ஆண்டாள் சன்னதி எதிரில் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண ஸ்வாமி திருமண கோலத்தில் பூக்கூடாரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், ஆண்டாள் பெருமாள் மாலை மாற்றி வாரணமாயிரம் பாராயணம் சேவித்து, ஸ்ரீவல்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிக்களைந்த திருமாலையை, ஆண்டாளும் பெருமாளும் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுதாகர், தக்கார் வரதராஜன், நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.