இலஞ்சி குமாரர் கோயில் அருகே பாலத்தை அகலப்படுத்த வேண்டும்!
குற்றாலம் : "இலஞ்சி குமாரர் கோயில் அருகேயுள்ள ஆற்று பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்சி குமாரர் கோயில் பழமையும், பெருமையும் கொண்டது. பண்டைய வரலாற்று சுவடுகளை உணர்த்தும் வகையில் குமாரர் கோயில் விளங்கி வருகிறது. அகத்திய முனிவர் பூஜை செய்து, அருணகிரிநாதரால் பாடப்பட்ட கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் இலஞ்சி குமாரர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவு இல்லை. மேலும் முகூர்த்த தினங்களில் குமாரர் கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடந்து வருகின்றன. இதனால் இலஞ்சி குமாரர் கோயில் செல்லும் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். குற்றாலம்-மதுரை ரோட்டில் இருந்து குமாரர் கோயிலுக்கு பிரிந்து செல்லும் ரோட்டில் ஆற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஒரு வாகனம் பாலத்தில் சென்றால் இருசக்கர வாகனம் கூட பாலம் துவங்குவதற்கு முன்னரே நின்று விட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இப்பாலமும் மிகவும் பழமையானதாக இருப்பதால் அதன் உறுதி தன்மையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இப்பாலம் வழியேதான் விவசாயிகள் சென்று வருகின்றன. வாகனங்கள் பெருகி வரும் நிலையில் இப்பாலத்தை சீரமைத்து அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.