சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை!
ADDED :5055 days ago
சபரிமலை: சபரிமலையில் நேற்று மாலை, திடீரென கொட்டி தீர்த்த மழையால், பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். சபரிமலையில், இந்த மகரவிளக்கு சீசனில் நடை திறந்த அன்றும், மறுநாளும் நல்ல மழை பெய்தது. அதன்பின், பகலில் நல்ல வெயிலும், இரவில் கடும் குளிரும் இருந்து வந்தது. நேற்று பகலிலும், நல்ல வெப்பம் காணப்பட்ட நிலையில், மாலை நான்கு மணிக்கு பின், பலத்த மழை பெய்தது. இதனால், சன்னிதான சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியது. இருமுடி கட்டுடன் மழையில் நனைந்த படி, பக்தர்கள் 18ம் படியேறினர். தரிசனம் முடிந்த பக்தர்கள், தங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டனர். எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால், பக்தர்கள் நின்று கொண்டே இருந்தனர். ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த பின், மழை சற்று ஓய்ந்ததால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.