உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா!

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா!

கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்ததின விழா,கேந்திரபள்ளி ஆண்டுவிழா, தேசிய இளைஞர் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(12ம் தேதி) கொண்டாடப்படுகிறது. எந்த மதத்தையும் கண்டிக்காததும், எதனையும் விலக்காததுமாகிய கொள்கைகளை தன்னகத்தே கொண்ட சனாதன தர்மம் என்னும் உலகளாவிய மதத்தின் பெருமையினை நவீன யுகத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று துல்லியமாக பறை சாற்றியவர்களில் முதன்மையானவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தர் ஆவார். தேசத்தினை புத்துயிர் பெறச் செய்யும் சக்திகளுக்கு உயிரூட்டி அவற்றை செயல்பட வைத்தவர்களுள் முதன்மையாக விளங்குகிறார். தேசத்தின் ஆத்மாவாக விளங்கும் இந்து தர்மத்தினை தேசம் முழுவதும் உணரும்படி செய்து அதன்மூலம் தேசமறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார் அவர். 2013 ஜனவரி 12 முதல் 2014 ஜனவரி 12 வரையிலும் பாரத தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவினை கொண்டாடிட விமரிசையான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகளும், இந்திய அரசும் கூட இதனைச் சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிடுகின்றன. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாளை (12ம் தேதி) கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு கேந்திர உதவி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் மதுமதி, நெல்லை பலகலை.,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாலை 6.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !