ருக்கு சமாதியில், கார் பார்க்கிங் : தி.மலை பக்தர்கள் வேதனை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், யானை, ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடம், கார் பார்க்கிங்காக மாறியுள்ளதால், பக்தர்கள்வேதனை அடைந்து உள்ளனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, 30, கடந்த மார்ச், 22ல், உடல்நலக் குறைவால் இறந்தது. பின், கோவிலின் ஈசான்ய மூலையில், அடக்கம் செய்யப்பட்டது. அங்கு, பக்தர்கள் அவ்வப்போது மலரஞ்சலி செலுத்தி வந்தனர். யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடம், தற்போது, கார் பார்க்கிங்காக மாறி விட்டது.
பக்தர்கள் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, 7 வயதில் வந்த யானை ருக்கு, 23 ஆண்டுகளாக, தீப திருவிழா உள்ளிட்ட, அனைத்து விழாக்களிலும் அலங்கரிக்கப்பட்டு, முன்னே செல்ல, பின்னால் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ருக்குவை, திருவண்ணாமலை நகர மக்கள், குடும்பத்தில் ஒரு உறுப்பினராக எண்ணி வழிபட்டனர். ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சிலர் கார், டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். எனவே, கார் பார்க்கிங்கை தடுத்து, ருக்குவுக்கு நினைவு மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.