உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் பாரியூர் குண்டம் விழா: காலை முதலே காத்திருந்த பக்தர்கள்!

லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் பாரியூர் குண்டம் விழா: காலை முதலே காத்திருந்த பக்தர்கள்!

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கோவிலில் பூக்குழி இறங்க, ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கோவிலில் குவியத் துவங்கியுள்ளனர். குண்டம் திருவிழா இன்று அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா டிச., 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாவிளக்கு பூஜை, காப்பு கட்டுதல், பூத வாகனக் காட்சி நடந்தது. நேற்று இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு குண்டம் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவில் குண்டத்தில் பத்து டன் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் விறகு காணிக்கை செலுத்தி வருகின்றனர். கோபி, ஈரோடு, மைசூரு, திருப்பூர், தாளவாடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குவர். நேற்று காலை முதலே, கோவிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு, பக்தர்கள் இரண்டு வரிசையாக காத்திருக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை உறவினர்கள் வழங்கி வருகின்றனர். கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பாரியூர் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டம் இறக்கும் பக்தர்கள் காயம் அடைந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோபி அரசு மருத்துவமனைக் குழுவினர் கோவில் வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. குண்டம் திருவிழாவுக்கு பக்தர்கள் குவிவதால் பாரியூர் கோவில் திருவிழா நேற்று முதல் களை கட்ட துவங்கியுள்ளது. நாளை தேரோட்டம், 14ம் தேதி மலர்ப்பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 15ம் தேதி தெற்போற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், 16, 17ம் தேதிகள் கோபியில் மஞ்சள் உற்சவம், 18, 19ம் தேதி புதுப்பாளையத்தில் மஞ்சள் உற்சவம், 20, 21ம் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் உற்சவமும், 21ம் தேதி அம்பாள் மலர் பல்லக்கில் திருக்கோவில் வந்தடைதல் மற்றும் மறு பூஜை நடக்கிறது.

கடையேழு வள்ளல்களில் முதலாமவர் பாரி. அவரது பெயராலேயே அமைந்தது பாரியூர். கோபிக்கு அருகில் உள்ள இந்த ஊர் முற்காலத்தில் மிகப்பெரிய பட்டணமாக இருந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் நிகழ்ந்த போரில் இது சிதைவு பட்டது. பாரி மன்னன் வாழ்ந்து, அரசாட்சி புரிந்த பறம்புமலை, இந்த ஊருக்கு அருகிலேயே உள்ளது. "பராபுரி என்றிருந்த இவ்வூர், "பாரியூர் என மருவியதாக கூறுவர். பாரியூரில் அமைந்துள்ள மிகப்பிரம்மாண்டமான கோவிலில் அருள்பாலிக்கிறாள் கொண்டத்து காளியம்மன். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவபெருமான் அமரபணீஸ்வரராகவும், விஷ்ணு ஆதிநாராயணராகவும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மார்கழி மாதம் துவங்கி சித்திரை வரையிலும் "பூ மிதித்தல் விழா தொடர்ந்து நடக்கும். இதில் புகழ் பெற்றது பாரியூர். இக்கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே, 50 அடி நீளத்தில் பக்தர்கள் பூமிதிக்கும் குண்டம் அமைந்துள்ளது. குண்டத்தை உடைய அம்மன்- "கொண்டத்து காளியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். "குண்டம் என்பதே "கொண்டம் என்று மருவியது. அம்மன் சன்னதிக்கு அருகிலேயே அங்காளம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்புறம் குதிரை வாகனமும், அருகிலேயே முனியப்ப சுவாமியும் உள்ளனர். பில்லி, சூனியம், பேய், பிசாசுத் தொல்லைகளில் இருந்து விடுபட, இவரை வணங்க வேண்டும். இவரது திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராதநோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. குண்டம் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது. பூச்சாட்டுதலுடன் இவ்விழா துவங்குகிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள், அன்று முதல் விரதத்தை ஆரம்பிக்கின்றனர். பூச்சாட்டுதல் விழாவில் இருந்து 12ம் நாள் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. அன்று அம்மனை தரிசிக்க ஆனந்தமாக இருக்கும். ஜன., 10ம் தேதி காலை முதலே பெண்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளத்துடன் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பூச்சாட்டுதலில் இருந்து 15ம் நாளான இன்று குண்டம் திருவிழா நடக்கிறது. முதல் நாள் இரவே குண்டத்தில், "கரும்பு என அழைக்கப்படும் கட்டைகளை அடுக்கி, கற்பூரம் ஏற்றி, நெருப்பு மூட்டுவர். குண்டம் நாளன்று காலையில், அம்மைக்கு அலங்காரம் செய்வித்து, பூசாரிகள் முறையாக அம்மனை அழைத்து, குண்டத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள, கருட கம்பத்தில் திருக்கோடி வைத்து குண்டத்துக்கு பூஜை செய்வர். அப்போது, அம்மையின் உற்சவ மூர்த்தியான, எழுந்தருள் நாச்சியம்மன் மேற்கு பார்த்து, இருகரம் ஏந்திய நிலையில், குண்டம் அருகே எழுந்தருள்வார். பூஜை முடிந்து, தலைமை பூசாரி தன் இருகரங்களிலும் குண்டத்தில் உள்ள நெருப்பை எடுத்து, வானத்தை நோக்கி மூன்று முறை இறைப்பார். பின் அவரும், மற்ற பூசாரிகளும், குண்டம் அமைத்தவர்களும், பக்தர்களும் தீ மிதிப்பர். இரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். வாழ்வின் துன்பங்கள் தீயிலிட்ட துரும்பாய் போக, குண்டம் திருவிழாவில் நாமும் பங்கேற்று, கொண்டத்து காளியம்மன் அருள்பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !