செங்கல்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED :2768 days ago
செங்கல்பட்டு: திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நேற்று, கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு, மேட்டுத்தெருவில், புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த விழா, ஏப்., 24ல் துவங்கி, வரும், 11ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று, கோவில் அருகே, துரியோதன் படுகளம் நடந்தது. வளாகத்தில், துரியோதனனின் பெரிய உருவம், களிமண்ணால் அமைக்கப்பட்டிருந்தது. கண்ணபிரான், தருமர், துரியோதனன், பீமன், துச்சலை, திரவுபதி ஆகியோரின் வேடமணிந்தோர், துரியோதனன், பீமன் போர்க்கள காட்சி, துரியோதனன் வதம், பாஞ்சாலி கூந்தல் முடிதல் ஆகிய நிகழச்சிகளை, கூத்தாக நிகழ்த்தினர். செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.