தேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED :2914 days ago
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், திப்ராயப்பேட்டை தேவி கருமாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று நடந்தது. திப்ராயப்பேட்டை தேவி கருமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி அம்மன் விபூதி காப்பு அலங்காரம், அம்மன் கதை வர்ணித்தல் மற்றும் தீபாராதனை நடந்தது. 10ம் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நாகவள்ளியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு, ஊர்வலமாக வந்து கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 2.30 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.