ஸ்தலசயன பெருமாள் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கூரை அமைக்கப்படுகிறது.இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், சித்திரை பிரம்மோற்சவத்திலும், பூதத்தாழ்வார் அவதார உற்சவத்திலும், திருத்தேரில் வீதியுலா செல்கின்றனர். இதற்காக, கமல வடிவ அலங்கார மரத்தேர், தற்போது பயன்படுத்தப்படுகிறது.இதற்கு முன், நீண்டகாலம் தேரின்றி, சகடை தேரே பயன்படுத்தப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மரத்தேர் செய்து, கோவிலுக்கு நன்கொடையாக அளித்தார்.கோவில் வளாக வடகிழக்கில், தேர் நிறுத்தப்பட்டு, தகடு கூரையால் மூடி பாதுகாக்கப்பட்டது. சாதாரண தகடு கூரை, சூறாவளி, ’வர்தா’ புயல் என, இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, பெயர்ந்து போயின.இதையடுத்து, பாலிதீன் போர்வை போர்த்தப்பட்டு, நாளடைவில் சேதமடைந்து, தேர் சீரழியும் நிலை ஏற்பட்டது. தற்போது, பிரம்மோற்சவம் முடிவுற்ற நிலையில், தேருக்கு, சூறாவளியால் பாதிக்கப்படாத வகையில், பாதுகாப்பு கூரை அமைக்கப்படுகிறது.