செய்யாற்றில் கருடசேவை கோலாகலம்
உத்திரமேரூர்: கூழமந்தல், பேசும் பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி, செய்யாற்று படுகையில் கருட சேவை விழா கோலாகலமாக நடந்தது. பெருநகர் அடுத்த கூழமந்தலில் பேசும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஆண்டுதோறும் கூழமந்தல்- பெருநகர் இடையேயான செய்யாற்று படுகையில் சுற்று வட்டார கிராம சுவாமிகள் அலங்காரத்துடன் வந்திருந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த ஆண்டுகளில், செய்யாறு மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தின், 15 கிராமங்களில் இருந்து, இந்த விழாவிற்கு சுவாமிகள் வருகை தந்து தரிசனம் அளித்தனர். ஆனால், சில கிராமங்களில் முன் போல விழா நடத்த அப்பகுதியினர் ஆர்வம் காட்டாததால், ஆண்டுக்காண்டு இவ்விழாவில் பங்கேற்கும் சுவாமிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தாண்டு, கூழமந்தலில் இருந்து பேசும் பெருமாள், இளநீர்குன்றம்; வைகுண்ட ஸ்ரீனிவாசப்பெருமாள், சோழாவரம்; கரியமாணிக்கப் பெருமாள், சேத்துப்பட்டு; கல்யாண வெங்கசேப்பெருமாள், இளநகர்; ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய ஐந்து சுவாமிகள், அந்தந்த பகுதிகளில் இருந்து, இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டனர். ஊர்வலமாக வந்து, அதிகாலையில், கூழமந்தலுக்கும், பெருநகருக்கும் இடையிலான செய்யாற்றில் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தனர். அங்கு, பக்தர்கள் கூடி, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பிறகு, காலையில் சுவாமிகள் தங்கள் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.