பழநி தைப்பூச விழா பிப்.1ல் கொடியேற்றம்!
பழநி : பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், பழநி தைப்பூச விழா பிப்., 1 ல், துவங்குகிறது. பிப்.,7 ல்., தேரோட்டம் நடைபெறும். பிப்., 1 ல், காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் கொடிகட்டி மண்டபத்தை வந்தடையும். காலை 11 மணிக்கு தைப்பூச கொடியேற்றம் நடைபெறும். உச்சிக்காலத்தில் மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் காப்புக்கட்டப்படும். விழா 10 நாட்களுக்கு நடைபெறும். பெரியநாயகி அம்மன் கோயில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை நடைபெறும். பிப்.,6 ல், இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்த பின், இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். பிப்., 7 காலை 5 மணிக்கு சுவாமி, சண்முகநதிக்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளி மாலை 4.35 மணிக்கு நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப்., 10 இரவு 7 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்போற்சவம் நடைபெறும். சுவாமி வாகனங்களில் எழுந்தருளி திருவுலா வருவார். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.