சமயபுரம் பைபாஸில் இறக்கி விடப்படும் பக்தர்கள்: பஸ்களை இயக்க கோரிக்கை
திருச்சி: சமயபுரம் அணுகு சாலை வழியாக பஸ்களை இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 வரை, தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலிருந்தும், தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் வரை, அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், சமயபுரம் வழியாகத்தான் சென்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல், சமயபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, 500 மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்று விடுவர். ஆனால், நான்கு வழிச்சாலை வந்த பின், சமயபுரத்துக்கு செல்ல அணுகு சாலை அமைக்கப்பட்டதால், டவுன் பஸ்கள் தவிர, வேறு எந்த பஸ்சும் சமயபுரம் உள்ளே வருவதில்லை. நெடுஞ்சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால் வெளியூரிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பைபாஸ் சாலையிலேயே இறக்கி விடப்படுகின்றனர். இரவு நேரம், அதிகாலை என்று, எல்லா நேரத்திலும் பைபாஸ் சாலையில், பக்தர்கள் இறக்கி விடப்படுவதால், அவர்கள் கோவிலுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், உடல் ஊனமுற்றோருடன் கோவிலுக்கு வருபவர்கள் மிகவும் துயரமடைகின்றனர். தமிழகத்தின் ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும், சமயபுரத்தில், அனைத்து வகை பஸ்களும் அணுகு சாலை வழியாக, உள்ளே வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.