திருமழிசை பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :2701 days ago
திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் மற்றும், பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழா, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை வேளைகளில், பல வகையான வாகனங்களில், பெருமாள் வீதியுலாவும், முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, 25ம் தேதியும் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு நடைபெற்ற தேரோட்டத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெகந்நாத பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, 11:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். நாளை காலை ஏழூர் புறப்பாடும், தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.