வடபழனி முருகன் கோவிலில் திருமணம் : ஆன்லைனில் முன்பதிவு
வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுக்கு, 2,000 திருமணங்கள் நடக்கின்றன.
கோவிலுக்குள் நடக்கும் அனைத்து திருமணங்களும், இடைத்தரகர்கள் ஏற்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்பது, இங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. இடைத்தரகர்கள் குறித்து, கோவில் நிர்வாகம் பல முறை, காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது. இருப்பினும், அரசியல் தலையீடு காரணமாக, கோவில் நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைன் மூலம் திருமணத்திற்கு முன்பதிவு செய்யும் முறையை, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.இனி, திருமணங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தான் நடைபெறும் என்றும், இதற்காக வடபழனி கோவிலின், vm.templepooja.in என்ற இணையதளத்தில், 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -