உறவுகளை ஒன்று சேர்க்கும் பெட்டி திருவிழா 80 ஆண்டு காலமாக தொடரும் பாரம்பரியம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை என்றாலே நினைவுக்கு வருவது நெசவு. அக்காலத்தில் கைத்தறி நெசவானது வீட்டிற்கு வீடு இருந்தது. காலை முதல் இரவு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் நெசவு செய்து கடுமையாக உழைத்தனர். குடும்பங்களில் உள்ள அனைவரும் உழைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழலில் பாடுபட்டனர். எந்தவித பொழுது போக்கும் இன்றி, நெசவு மட்டும் செய்து வந்தனர். பொழுதுபோக்கு என்றால் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடக்கும் ஆனி பிரமோற்ஸவ விழா தான்.
12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொள்வர். திருக் கல்யாணம், தேரோட்டத்தில் பங்கேற்க 3 நாட்கள் நெசவிற்கு குட்பை சொல்லி விட்டு விழாவை கொண்டாடுவர். தேரோட்டம் முடிந்து மறுநாள் பாரம்பரிய மிக்க பெட்டி திருவிழா நடப்பதுண்டு. அவரவர் வீட்டில் பலகாரங்கள் செய்து நார்ப்பெட்டியில் எடுத்தப்படி குடும்பம், உறவினர்களை அழைத்து கொண்டு கோயிலுக்கு அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தற்கு செல்வர். கடந்த 80 ஆண்டு காலமாக நடக்கும் இப்பாரம்பரிய நிகழ்ச்சியானது இரவு 7:00 மணியிலிருந்து 10:00 மணி வரை தொடரும்.
வெளியூர் உறவினர்கள், உற்றார்கள் குடும்பத்துடன் பங்கு கொள்வர். அக்காலத்தில் நாரினால் ஆன பெட்டியே இருந்ததால், இதில் வைத்து பலகாரங்களை கொண்டு சென்றதால், இதை பெட்டி திரு விழாவாக அழைக்கின்றனர். ஆனால் இன்று, இன்றைய சூழலுக்கு ஏற்ப பிளாஸ்டிக் கூடை, ஹாட்பாக்ஸ் போன்றவற்றில் வெரைட்டியான உணவு வகைகளை கொண்டு வந்து சாப்பிடுகின்றனர். விட்டுப் போன உறவுகள், உறவுகளில் மனக் கசப்பு போன்றவைகள் இத்திருவிழாவில் கூடும் போது சரியாகி விடுகிறது. உறவுகளை இணைக்கும் பாலமாக இத்திருவிழா உள்ளது. பெண் மற்றும் மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி கூட இவ் விழாவில் நடக்கும் என்கின்றனர் இவ்வூர் மக்கள்.
குடும்பமாக கூடுவதால் மகிழ்ச்சி: எனக்கு 83 வயதாகிறது. நினைவு தெரிந்த நாளில் இருந்து பெட்டி திருவிழா நடக்கிறது. அனைவரும் ஒன்று கூடி, குடும்பத்துடன் உற்சாகமாக பேசி மகிழ்வோம். முன்பு, சேவு, மிக்சர், சீவல், இனிப்பு, மாம்பழம் போன்றவைகளை கொண்டு வருவோம். இன்று நவீன உணவு வகைகளை கொண்டு வருகின்றனர்.
சொர்ணம்மாள், குடும்ப தலைவி
உறவுக்கு பாலமாக உற்றார், உறவினர்களுடன் கலந்து பேச, பழக நல்ல வாய்ப்பாக இவ்விழா உள்ளது. பிரச்னைகளை எல்லாம் மறந்து, கொண்டு வந்த பலகாரங்களை பகிர்ந்து சாப்பிட்டு கொண்டே கதைகள் பேசி மகிழ இந்த விழா நடத்தப்படுகிறது. பாரம்பரிய மிக்க இவ்விழாவில் கலந்து கொள்ள எங்கிருந்தாலும் வந்து விடுவர்.
-வெற்றிசெல்வி, குடும்ப தலைவி
சங்கடங்கள் தீர்க்கும் விழா: உறவுகளில் பிரச்னை, குடும்பங்களில் சங்கடங்கள் இவையெல்லாம் இவ்விழாவில் கலந்து கொள்ளும் போது சரியாகி விடுகிறது. உறவுகளை வலுப்படுத்தும் விழாவாக இது உள்ளது. பெண் பார்த்தல், மாப்பிள்ளை பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் புதிய உறவுகளும் மலர்கிறது. -- -குமார் பாண்டியன், டெய்லர் -