கிரிவலம் செல்ல வழி பக்தர்கள் வேண்டுகோள்
பல்லடம்:பஸ் ஸ்டாப், ரோடு வசதி இல்லாததால், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், பரிதவிக்கின்றனர். மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், நுாறாண்டு பழமை வாய்ந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தைப்பூசம், வைகாசி விசாகம் உட்பட முக்கிய விழாக்கள், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி என, மாதந்தோறும் வரும் முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பிரசித்தி பெற்ற கோவில் என்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையை ஒட்டி கோவில் அமைந்திருந்தும், உரிய வசதிகள் இல்லை என்பது, பக்தர்களின் வருத்தம்.
பக்தர்கள் கூறுகையில்,கோவிலுக்கு சென்று வர, உரிய பஸ் வசதியில்லை; பஸ் ஸ்டாப் இல்லாததால், பஸ்களும் நிற்பதில்லை. கோவிலுக்கு செல்வதற்கான வழித்தடம், கற்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சேறு, சகதி நிறைந்திருப்பதால், கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பிரச்னைகளை களைந்து, கோவில் பிரபலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.