ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்!
ராமேஸ்வரம் : தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ராமநாத சுவாமி பர்வதவர்த்தனி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி வழங்க, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடந்தது. காலை 8 மணிக்கு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். பின், அக்னி தீர்த்தம் மண்டகப்படியில் எழுந்தருள சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நேற்று மதியம் துவங்கி இன்று மதியம் வரை அமாவாசை நீடிப்பதால், புனித நீராடலுக்கு இன்றும் அதிகளவில் பக்தர்கள் வருவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.