உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதில் நிம்மதி நிலவட்டும்!

மனதில் நிம்மதி நிலவட்டும்!

அந்த கிராமத்திற்கு மகாசுவாமிகள் வந்த போது மக்கள் சூழ்ந்து நின்று குறைகளை தெரிவித்தனர்.  “சுவாமி.. இந்த ஊரில் நீண்ட நாளாக  மழை பெய்யவில்லை.
தண்ணீர் இல்லை. செல்வந்தர் ஒருவரின் கிணற்றில்  மட்டும் தண்ணீர் இருக்கிறது. மோட்டார் பம்ப் மூலம் நீர் இறைக்கும் அவர் கிணற்றைச் சுற்றி வேலி போட்டிருக்கிறார். யாருக்கும் தண்ணீர் தருவதில்லை.” என்று சொல்லி வருந்தினர்.  அந்த நேரத்தில் சுவாமிகளை தரிசிக்க செல்வந்தர் வந்தார். ‘தாங்கள் குறிப்பிட்ட செல்வந்தர் இவர் தான்...’ என்பதை மக்கள் தெரிவித்தனர்.  சுவாமிகள் அவரிடம், “சவுக்கியம் தானே? காசு பணத்திற்கு குறைவில்லையே?” என்றார்.  “உங்கள் புண்ணியத்தால் பணத்திற்கு குறைவில்லை சுவாமி... ஆனால் மனதில் தான் சில குறைகள்...” என்று பெருமூச்சு விட்டார் செல்வந்தர்.  “என்னப்பா.... குறை?” “வீட்டிலாகட்டும், வெளியிலாகட்டும். யாரும் என்னை மதிப்பதில்லை. அதை விடப் பெரிய குறை... மனதில் நிம்மதியே இல்லை சுவாமி ” “ இதற்கெல்லாம் மருந்து ஒன்று தான்” என்று புன்னகைத்த சுவாமிகள் மேலும் தொடர்ந்தார்.   “நான் சொல்வதைக் கேட்டால்  நெஞ்சில் நிம்மதி என்றும் நிலைத்திருக்கும்”  என்றார்.

பணிவுடன் தலையசைத்தார் செல்வந்தர்.  “ ஊராருக்கு உதவியாக உங்கள் கிணற்றைச் சுற்றியுள்ள வேலியை எடுங்கள்.  அனைவரும் தண்ணீர் இறைக்க அனுமதியுங்கள்.  நீர் வற்றி விடும் என்ற கவலை வேண்டாம்.  இறைக்க இறைக்க கிணற்றில் நீர் சுரக்கும்.  இந்த பஞ்சம் கொஞ்ச காலத்திற்குத் தான். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய கடவுள் தந்திருக்கும்  வாய்ப்பு இது என நினையுங்கள். இப்படி செய்தால் மக்கள் மதிப்பர். அதன் மூலம் வீட்டிலும் மதிப்பு கூடும். யாரும் மதிக்கவில்லையே என்றே மனதில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்கள். இந்த நிலைமை சரியாகி  விட்டால் நிம்மதிக்கு குறைவிருக்காது.  செல்வந்தரும் சம்மதித்தார். செல்வந்தர் மற்றும் ஊரார் பிரச்னையையும் ஒரு சேரத் தீர்த்த மகாசுவாமிகளை அனைவரும் வணங்கினர். - திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !