உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எங்கிருந்து தீமை பிறக்கிறது?

எங்கிருந்து தீமை பிறக்கிறது?

அன்று வெள்ளிக்கிழமை என்பதை மறந்து போய் மீனாட்சி கோயிலுக்குச் சென்றது  தவறு தான். சிறப்பு தரிசன வரிசையே ஒரு மைல் நீளத்துக்கு நின்று கொண்டிருந்தது. சீட்டு விற்றுக்கொண்டிருந்த பெண்மணியின் குரல் எனக்கு வியப்பைத் தந்தது. “சீட்டெல்லாம் வாங்காதே. இங்கேயே என் அருகில் அமர்ந்து கொள். உன் மனதில் இருக்கும் கேள்விக்கு விடை சொல்லத்தான் நான் வந்திருக்கிறேன்” அவள் கால்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டேன். “உன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்”
“தீமை எப்படி உருவாகிறது? அரக்கர்கள் எப்படி தோன்றுகிறார்கள்? எனக்கு இருக்கும் குறைந்தபட்ச அறிவை வைத்துப் பார்க்கும் போது பல அரக்கர்கள் ஆரம்பத்தில்
நல்லவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராவணன் சிறந்த சிவபக்தன். அவன் காம்போதி ராகத்தில் பாடினால் சிவபெருமானே உருகிவிடுவார் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவனுக்கு எப்படி தேவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது? ராமனின் மனைவியான சீதையைக் கவர்ந்து செல்ல வேண்டும் என்ற கொடிய எண்ணம் எப்படி உருவானது? நரகாசுரன் கூட ஒரு வகையில் திருமாலின் புதல்வன் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் ஏன் தங்கள் பிறப்பை மறந்து நல்ல குணங்களை விடுத்து அசுரர்களானார்கள்?”

“இப்போது நாம் ராவணனையும் நரகாசுரனையும் ஆராய வேண்டாம், இன்றைய காலத்தில் ஒரு மனிதன் எப்படித் தீயவன் ஆகிறான் என்பதைக் காட்டுகிறேன். புரிந்து கொள். ஒரு மனிதனின் முப்பதாண்டு கால வாழ்க்கையைக் காட்டப் போகிறேன். கவனமாகப் பார்.” கண் முன்னால் விரிந்த காட்சியில் இருபது வயது இளைஞன் ஒருவன் தோன்றினான். அவன் முகத்தில் அதீத சாந்தம் இருந்தது. பாவம் வறிய குடும்பத்தில் பிறந்தவன் போல் இருக்கிறது. ஆடை கிழிந்திருந்தது. தலையில் கொஞ்சம்கூட எண்ணெய்ப்பசையே இல்லை. ஒரு சிறிய நகரில் இருந்த பலசரக்குக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வயதான தந்தை, நோய்வாய்ப்பட்ட தாய், திருமண வயதில் சகோதரி என்றிருந்த குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.  பணத்தேவை மிக அதிகமாக இருந்த போதிலும் மிக நேர்மையான வனாக இருந்தான். ஒரு முறை அவனுடைய கடை முதலாளி கத்தை கத்தையாகப் பணத்தைக் கல்லாவில் வெளியில் தெரியுமாறு வைத்துவிட்டு அதைப் பூட்டாமல் சென்றுவிட்டார். அவனுடைய நேர்மையைச் சோதிக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார். அவன் கல்லாவை இழுத்து மூடிவிட்டுக் காவலாக அங்கேயே நின்றான். கல்லாவின் மேல் ஒரு கண் வைத்த படியே வந்த வாடிக்கையாளர்களையும் கவனித்துக் கொண்டான்.  மூன்று மணி நேரம் கழித்து வந்த முதலாளி கல்லாவில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார். ஒரு பைசா குறைய வில்லை. அந்த இளைஞனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டார்.

“உனக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன்” என்று சொன்னார். சொன்னபடி செய்தார். அந்த இளைஞனின் நிதிநிலைமை கணிசமான அளவு முன்னேறியது.
வியாபாரத்தை அவனே திறம்பட நடத்தியதால் செல்வம் பெருகியது. காலம் ஓடியது. இளைஞனுடைய பெற்றோர் காலமாகி விட்டனர். அவனுடைய சகோதரிக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. முதலாளியின் காலம் முடிந்தபின் அவனே கடைமுதலாளியா னான். பல கடைகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தான் அவன். அவன் கீழ் சேவகம் செய்ய பணியாட்கள் பலர் இருந்தனர்.“அவன் மன ஓட்டத்தைக் கண்டறியும் வல்லமையும் உனக்குத் தருகிறேன். அப்போதுதான் எந்த இடத்தில் அவனுடைய வீழ்ச்சி தொடங்குகிறது என்பதை நீ அறிய முடியும்.” அந்த இளைஞன் இன்னும் நல்லவனாகவே இருந்தான். ஏதோ ஒரு பலவீனமான கட்டத்தில் அவன் மனதில் ‘நான் நல்லவன். மற்றவர்கள் அப்படியில்லை” என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விட்டது. முதலில் ஒரு சுகமான உணர்வைக் கொடுத்த அந்த நினைப்பு போகப் போக கர்வத்தை கொடுத்தது. அவன் கடை ஊழியன் ஒருவன் திருட்டுத்தனமாகக் கடலையை எடுத்துத் தின்பதைப் பார்த்துவிட்டான் அவன். அவனைக் கண்டபடி ஏசினான். கை நீட்டினான்.

“இப்படி திருடித் தின்றதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாம்டா. கத்தை கத்தையாப் பணம் கண்ல படறமாதிரி இருந்தும் நான் ஒரு பைசா எடுக்கல. அதனாலதாண்டா நான் இப்படி இருக்கேன்.” “ஐயா... காலையிலருந்து ஒண்ணும் சாப்பிடலய்யா. ஒரே பசி. அதான்.. ”அவனை வேலையை விட்டுத் தூக்கினான். நண்பர், உறவுக்கா ரர்களில் யாராவது தவறு செய்வதைக் கண்டால் நான்கு பேருக்கு முன்னால் கண்டபடி திட்டுவான். நேர்மையில்லாமல் வாழ்வதற்குப் பதில் செத்துவிடலாம் என்று கத்துவான். அவனால் அவமானப்படுத்தப்பட்ட நண்பர்களில் ஒருவன் அவனுக்குப் பாடம் புகட்ட எண்ணினான். ஒரு நாள் அவன் கடைக்கு ஒரு அழகான பெண்ணை அழைத்து வந்தான். ‘இவளுக்கு யாரும் ஆதரவு இல்லை. சில நாட்கள் உன் கடையிலேயே வேலை பார்க்கட்டும்” என்று சொன்னான். அவள் நேர்மையாகத் தானிருந்தாள். மற்ற ஊழியர்கள் செய்யும் தகிடுதத்தங்களை அவனிடம் அவ்வப்போது சொன்னாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம், அவள்பால் செல்லத் தொடங்கியது. ஒரு நாள் மழையில் இருவரும் தனியாக ஊர்க்கோடியில் உள்ள கடையில் இருக்க வேண்டிய நிலை வந்த போது நிலைமை கைமீறியது. அவளுடன் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். அதனால்  மனைவியிடம் பொய் சொல்லத் தொடங்கினான். அவளுக்குக் காசு கொடுக்கக் கடையில் பொய்க்கணக்கு எழுதினான்.  அவள் பெரிய செலவாளியாக இருந்தாள். செலவைச் சமாளிக்கக் கலப்படம் செய்தான். அதை பார்த்துவிட்ட கடை ஊழியனை அவன் பயங்கரமாகத் தாக்கியதால் இறந்தே போனான். கொலை வழக்கில் சிக்கிக் கொண்டான். அதிலிருந்து மீள இன்னும் அதிகமான தகிடுதத்தங்களைச் செய்தான். இறுதியில் வெக்கை நோய் வந்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்தே போனான்.

“இதில் என்ன நீ புரிந்து கொண்டாய்?” “தான் நல்லவனாக இருப்பது தன்னால் அல்ல,  உங்களின் அருளால் என்பதை அந்த இளைஞன் உணரவில்லை தாயே. அதுதான் அவன் அழிவின் வித்து...தவறு செய்பவர் மீது இரக்கம் காட்டவேண்டும். அவன் சூழ்நிலையையும் பார்க்கவேண்டும். முதல் முறை என்றால் மன்னிக்கவும் தயங்கக்கூடாது..”அன்னை முகம் மலர்ந்தாள் “நாயேனை நாளும் நல்லவனாக்க ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்” என்று பாடியபடி அன்னையின் காலடியில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்தேன். அன்னை அங்கு இல்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !