உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற தடை நீக்கப்படுமா?

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற தடை நீக்கப்படுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், நெய்தீபம் விற்பனைக்கும், விளக்கேற்றி வழிபடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், பிப்., 2ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தீ தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.


அதன்படி, மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின் ஊழியர்கள், அர்ச்சகர்கள், அன்னதானக்கூடம் பணியாளர்களுக்கு, தீயணைப்புத் துறையினர், தீ தடுப்புப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர். மேலும், கோவில்களில் தீபங்களை ஆங்காங்கே ஏற்றாமல், அகண்டம் போன்ற அமைப்பு அல்லது பிரத்யேகமான வாடா விளக்கை வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கொடிமரம் மற்றும் கோவிலின் பிற சன்னதிகளின் முன், தீபமேற்ற தடை விதிக்கப்பட்டு, கொடி மரம் அருகே, பெரிய விளக்கு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில்களில், தீபம் ஏற்றவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்த எம்.கார்த்திகேயன் என்ற பக்தர் கூறியதாவது: குடும்பத்தினருடன், காஞ்சிபுரத்தில் கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளோம். ஏகாம்பரநாதர் கோவிலில், தீபமேற்றக்கூடாது என, தெரிவித்தனர். இதனால், மன வருத்தத்துடன், ஆதிபீட காமாட்சியம்மன் கோவில், குமரக்கோட்டம், ராகு, கேது பரிகார ஸ்தலமான மாகாளேஸ்வரர், காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு, மன நிம்மதியுடன் தீபம் ஏற்றி வழிபட்டேன். கோவிலுக்குச் சென்றால் மனச்சுமை குறையும் என்பார்கள். ஆனால், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், தீபம் ஏற்றி வழிபட தடை விதிக்கப்பட்டதால், மனச்சுமையுடன் வீடு செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !