வடுகநாத சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை:பக்தர்கள் வழிபாடு
பல்லடம்: கணபதிபாளையம் வடுகநாத சுவாமி கோவிலில், கால பைரவருக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மாதந்தோறும், அமாவாசையை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள், பைரவருக்கு உகந்தது, என்பது ஐதீகம். அந்நாளில், பக்தர்கள், பைரவருக்கு சிறப்பு வழிபாடு, பரிகாரம் செய்வர்.பல்லடம் அருகே மலையம்பாளையம் பிரிவில் உள்ள வடுகநாத சுவாமி கோவிலில், கால பைரவர் மூலவராக இருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு, ஆராதனை நடந்தன. பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளை பூசணி வைத்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் பரிகாரம் செய்தனர். சுந்தரபாண்டியன், ஆன்மிக உரையாற்றினார்.இரவு, 8.00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; அன்னதானம் வழங்கப்பட்டது.