திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு
பெங்களூரு: - திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் மூடிக்கிடக்கும், இரண்டாவது சுரங்கக் கதவை திறக்க அனுமதி கேட்டு, கர்நாடக மாநிலம், தங்கவயலைச் சேர்ந்த ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தங்க வயலில், ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:உலகில் அதிக வருமானம் உள்ள கோவில், திருப்பதி என்கின்றனர். ஆனால், அதிக சொத்துகள் உடையது, கேரளாவின் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தான்.இந்தக் கோவிலில், ஆறு பாதாள சுரங்கக் கதவுகள் உள்ளன. மூன்றாவது, நான்காவது கோவில் கதவுகளை ஆண்டுக்கு மூன்று முறை திறக்கின்றனர். திருவிழா, பண்டிகை காலங்களில், சுவாமி அலங்காரத்துக்கு நகைகள் எடுத்து அணிவித்து விட்டு, விழா முடிந்ததும், அவற்றை மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுவர்.ஐந்தாவது, ஆறாவது குகைக் கதவுகள் மட்டுமே தினமும் திறந்து, பூஜை பொருட்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது குகைக் கதவு திறக்கப்படுவதே இல்லை. அவற்றைத் திறப்பவர் இறந்து விடுவர் என, கோவில் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.அம்மன் சக்தியால், பத்மநாப சுவாமி கோவிலின் அனைத்து சுரங்கக் கதவுகளையும் திறக்கும் அருள் பெற்றுள்ளேன். இந்த கதவை திறக்க உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.