உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பிகை போல் ஒரு தெய்வமுண்டோ

அம்பிகை போல் ஒரு தெய்வமுண்டோ

காஞ்சிபுரம் மகாசுவாமிகளிடம் “கடவுளை தாயாக வணங்குவதன் நோக்கம் என்ன?” என்று கேட்டார் பக்தர் ஒருவர். “ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது அவ்வையின் மூதுரை, ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்று சொல்கிறது வேதம். இரண்டுமே தந்தைக்கு மேலாக தாயை முதல் தெய்வமாக குறிப்பிடுகிறது. தாயை தெய்வமாக நினைப்பது போலவே, தெய்வத்தை தாயாக நினைப்பது தான் அம்பிகை வழிபாடு. ஆடிமாதத்தில் அம்பிகை வழிபாடு எல்லா கோயில்களிலும் சிறப்பாக நடக்கும். உலகில் அம்மாவை விட அன்பானவர் யார்?  பயமோ, வெட்கமோ சிறிதுமின்றி குழந்தைகள் அம்மாவிடம் அதிக உரிமை கொள்வது போல, அம்பிகையிடம் பக்தர்கள் அதிக உரிமை கொள்ளலாம்.  தாயன்பு மாதிரி தூய அன்பு கிடையாது. தன்னை நேசிக்காத நிலையிலும்  எதிர்பார்ப்பு இன்றி பிள்ளைகளை அம்மா நேசிப்பாள். ‘பெத்த மனம் பித்து;  பிள்ளை மனம் கல்லு’ என்று பழமொழி உண்டு.  துஷ்டத்தனமான பிள்ளைகள் இருக்கலாம்; ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி உலகில் இருக்கவே மாட்டாள். ‘தேவி அபராத ஷமாபன ஸ்தோத்திரம்’  என்னும் நூலில் ‘துஷ்ட அம்மா என்று யாரும் இருப்பதில்லை’ என்று சொல்லப்பட்டுள்ளது.  குழந்தைகள் இயல்பாகவே அம்மாவின் அன்பில் ஒட்டிக் கொள்வர். அவளது உயிரில், அவள் அளித்த உணவில் தானே நாம்  வாழ்கிறோம். எல்லாம் பார்த்துக் கொள்வாள் என தாயின் நிழலில் வளர்கிறோம். அது போல அம்பிகையை தாயாக கருதி சரணடைந்தால் துன்பம் வராமல் பார்த்துக் கொள்வாள்.

உயிர்கள் அனைத்தும் அம்பிகையின் குழந்தைகள் தானே! குழந்தைகளாக இருந்த போது நம்மிடம் தெய்வத் தன்மை இருந்தது.  கள்ளம் கபடற்ற மனம் இருந்தது. வளர வளர இந்த எண்ணத்தில் இருந்து விலகுகிறோம்.  தெய்வத்தை தாயாகக் கருதி பக்தி செய்தால்  நாம் மீண்டும் குழந்தையாகி விடுவோம். அந்நிலையில்  தெய்வீக பண்புகள் மலரும். பசியோ நோயோ எதுவானாலும், ‘அம்மா.. அம்மா’ என்று குழந்தை தாயை சார்ந்திருப்பது போல ஜகன்மாதாவான அம்பிகையை சார்ந்தால் உலகில் துன்பம் மறையும் ” என்றார் சுவாமிகள்.  அம்பிகை போல் ஒரு தெய்வமுண்டோ... என்று சிந்தித்தபடி விடைபெற்றார் பக்தர். திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !