ஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்
திருப்பதி : திருமலையில், ஆகஸ்டு மாதம் நடக்கவுள்ள மகா சம்ப்ரோக் ஷணத்தின் போது, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவிலிருந்து தேவஸ்தானம் பின்வாங்கியுள்ளது. ஆந்திர மாநிலம், திருமலையில், ஏழுமலையான் கோயிலில், ஆக., 11ம் தேதி முதல், 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக் ஷணம் நடக்க உள்ளது. அதற்காக, பலாலயம் ஏற்படுத்துதல், வைதிக காரியம் செய்தல், செப்பனிடும் பணிகள், அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடக்க உள்ளதால், தேவஸ்தானம், ஆக., 9ம் தேதி மாலை, 6:00 மணி முதல் ஆக., 17ம் தேதி காலை, 6:00 மணி வரை பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது. இதற்கு சமூக தளங்களில் எதிர்ப்பு பரவியதுடன், தவறான விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகளை வரவழைத்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, திருமலையில் நேற்று காலை, தேவஸ்தான செயல் அதிகாரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகா சம்ப்ரோக் ஷணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜூலை, 23ம் தேதி, திருமலையில் பக்தர்களிடம் கருத்துகணிப்பு நடத்தி, ஆலோசனை கேட்டு அவர்களின் முடிவின்படி நடக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, ஜூலை, 24ம் தேதி அவசர அறங்காவலர் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு பின் தரிசனம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்தால், ஆக., 11ம் தேதி முதல், ஆக., 16ம் தேதி வரை தொடர்ந்து, 6 நாட்களுக்கு, 30 மணிநேரம் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்காக ஒதுக்க முடியும். அந்நேரங்களில், தினசரி, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.