உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 40வது பட்டம் அழகியசிங்கர்

40வது பட்டம் அழகியசிங்கர்

மகாவிஷ்ணுவின்  முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்த தலம் துவரிமான். இங்குள்ள ரங்கராஜப்பெருமாள் கோயிலுக்கு அருகில் அகோபில ஜீயர் சுவாமியின் பிருந்தாவனம் உள்ளது.  மடத்தின் 40வது பட்டமான இவரது திருநாமம் ரங்கநாத சடகோப யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள்.


1923ல் இவர் மதுரை கூடலழகர், அழகர்கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்துார் தலங்களை தரிசித்து விட்டு,  துவரிமானில் தங்கிய போது முக்தியடைந்தார். இவரது சமாதிக்கோயிலான பிருந்தாவனம் வைகைநதிக்கரையில் கட்டப்பட்டது. கருவறையில் ஜீயர் வலது கையில் திருத்தண்டும், இடது கையில் ஓலைச்சுவடியும் தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார்.  செப்புத்திருமேனி  ஒன்றும் உள்ளது.  


ஜீயரின் அற்புதங்கள்: ஜீயர் மடாதிபதியாக இருந்த காலத்தில் அற்புதங்கள் பல நிகழ்த்தினார்.  ஆந்திராவின் கர்நுால் மாவட்டத்தில் உள்ளது அகோபிலம் மடம். இங்குள்ள நரசிம்மர் கோயிலுக்கு அருகில் பிரம்ம ராட்சஷன் ஒருவன் இருந்ததால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த ஜீயர்,  நரசிம்ம மந்திரம் ஜபித்து ராட்சஷனை விரட்டினார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் நேரில் பேசும் திருக்கச்சிநம்பி போல ஜீயரும் பேசும் சக்தி பெற்றிருந்தார்.  ஒருமுறை மடத்தின் யானைக்கு மதம் பிடிக்கவே, பாகனால் அடக்க முடியவில்லை. இந்நிலையில் ஜீயர், யானையின் முகத்தில் தீர்த்தம் தெளித்து கையால் தடவிக் கொடுக்க அது சாந்தமானது.


ஆந்திராவிலுள்ள கட்வல் சமஸ்தானத்தில் சோமபூபால் என்பவரின் ஆட்சிக்காலத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அப்போது கோயிலுக்குள் பிராமணர் ஒருவர் கொல்லப்படவே சோமபூபாலுக்கு வாரிசு இல்லாமல் போனது. இதன்பின் கட்வல் வந்த ஜீயர் மூன்றாண்டுகள் தங்கி, பெருமாளுக்கு புதிய சிலைகளை நிர்மாணித்து கும்பாபிேஷகம்  நடத்தவே நிலைமை சீரானது. இதன்பின் கட்வல் சமஸ்தானம் ஜீயருக்கு பொன்னும், பொருளும் அளித்து பெருமை சேர்த்தது.  

பரிகார வழிபாடு:  ஜீயரை தரிசித்து 16 முறை வலம் வந்தால் எதிரி பயம், நீதிமன்ற வழக்கு, கடன் பிரச்னை நீங்கும். மாணவர்கள் துளசிமாலை சாத்தி வழிபட ஞாபகதிறன் அதிகரிக்கும். கல்வி வளர்ச்சி உண்டாகும். விளக்கு ஏற்றி வழிபடும் கன்னியருக்கு நல்ல மணவாழ்வு கிடைப்பதோடு குழந்தைப்பேறும் உண்டாகும். துளசி தீர்த்தம் பருகினால் பயந்த கோளாறு, காரணமற்ற அச்சம் நீங்கும்.   அர்ச்சனை செய்த மிளகை சாப்பிட நீண்டநாள் நோய் விலகும். சனிக்கிழமையன்று தரிசித்து தீபமேற்ற கிரக தோஷம் பறந்தோடும். வருஷாபிேஷகமான ஆனிவிசாகத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடக்கும். ஜீயரின் அவதரித்த மார்கழி விசாகம், நினைவு நாளான தைமாதம் தேய்பிறை திரயோதசியில் சிறப்பு பூஜை நடக்கும்.  

எப்படி செல்வது? மதுரை– சோழவந்தான் ரோட்டில் மேலக்கால் வழியில் 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்:ஆனி விசாகம், மார்கழி விசாகம், தை தேய்பிறை திரயோதசி திதி  
நேரம்: காலை 5:00 - 8:00 மணி, மாலை 4:00 – இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 94878 26722, 0452 – 247 5238
அருகிலுள்ள தலம்: துவரிமான் ரங்கராஜப்பெருமாள் கோயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !