மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் விழா நடைபெறுகிறது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, 17ல் பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தன. 22ல் கொடியேற்றப்பட்டது. நேற்று மாலை, 5:00க்கு குண்டம் திறக்கப்பட்டு, பொங்கல் வைக்கப்பட்டது. பின், 36 அடி நீளம், ஒன்றரை அடி அகலமுள்ள குண்டத்தில், ஊஞ்சை விறகுகள் அடுக்கப்பட்டன. கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன், பூஜை செய்து, விறகுகள் மீது கற்பூரத்தை போட்டார். மகாதேவபுரம் நாடார் இளைஞர் நற்பணி மன்றத்தினர், குண்டம் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கட்டளைதாரர்கள் டேன் இந்தியா நிறுவனத்தினர் ஆகியோர் பங்கேற்றனர். இன்று காலை, 6:00க்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில்,குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 20 இடங்களில் தற்காலிகமாக குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. குண்டம் இறங்குவோருக்கு காலில் காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இரண்டு தனியார் மருத்துவமனைகள் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக, கூடுதலாக, 16 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார்.