சந்திர கிரஹணம் நிறைவு: சேலம் கோவில்களில் வழிபாடு
சேலம்: சந்திர கிரஹணம் நடந்ததால், சேலம் மாவட்ட கோவில்களில், திரளானோர் தரிசனம் செய்தனர். முழு சந்திர கிரஹணம், நேற்று முன்தினம் இரவு, நான்கு மணி நேரம் வரை நடந்தது. குரு பவுர்ணமி நாளில் நடந்த கிரஹணம், நேற்று காலை நிறைவடைந்த பின், கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு, வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. வழக்கத்தை விட, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக, சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, கோட்டை பெருமாள், மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும், நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பரிகார பூஜை: உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மூலவர், பெரிய நாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்து, பூஜை நடந்தது. சந்திர கிரஹணத்தால் தோஷம் ஏற்பட்டுள்ள நட்சத்திரக்காரர்களுக்கு, பரிகார பூஜை நடந்தது. தோஷம் நீங்க, ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.