ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை விசேஷங்களா...
திருப்பூர்: நடப்பு ஆக., மாதத்தில், அதிக, விசேஷங்கள் அணிவகுத்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மாதங்களில், தை முதல் ஆனி வரையிலான மாதம், உத்ராயணகாலம் எனவும், ஆடி முதல் தை மாதம் வரையிலான மாதங்கள், தட்சிணாயன காலம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. தட்சிணாயன காலத்தில் வரும் முக்கியமான ஆண்டு விரதங்கள், பண்டிகைகள், ஆக., மாதத்திலேயே வருவது, விசேஷமானது என, ஆன்மிகவாதிகள் வரவேற்றுள்ளனர்.
காவிரியை வரவேற்று கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு இம்மாதத்தில் விேஷசமானது. நாளை (3ம் தேதி) ஆடிப்பெருக்கில், பண்டிகை மாதம் துவங்குகிறது எனலாம். வரும், 5ல் முருகப்பெருமானுக்கு விேஷசமான ஆடிக்கார்த்திகை, 11ல் ஆடி அமாவாசை, 13ல் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமான ஆடிப்பூரம். ஆக., 14ல் நாக சதுர்த்தி, ஆக., 15ல் கருடபஞ்சமி, 21ல், சகல ஐஸ்வர்யம் அருளும் மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிேஷகம், 22ல் பக்ரீத் பண்டிகை, 24ல், வரலட்சுமி விரதம், 25ல் மலையாளிகளின் ஓணம் பண்டிகை, 26ல் ஆவணி அவிட்டம், 27 ல் காயத்ரி ஜபம், 30ல் மகா சங்கடஹர சதுர்த்தி ஆகிய வைபவங்கள் நடக்கின்றன. மேலும், இந்த மாதத்தில், சுதந்திர தினவிழாவும் கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பு. மொத்தத்தில், அருள்பொங்கும் ஆன்மிக வழிபாடு நிறைந்த மாதமாக, ஆகஸ்ட் அமைந்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.