திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா, நேற்று, ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரைத் தரிசித்தனர். அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக்கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக, சரவணப் பொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தைச் சுற்றி வலம் வந்தார். பின், உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்குச் சென்ற பின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்து பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரைத் தரிசித்தனர். இன்று ஆடிப் பரணி இன்று ஆடிப் பரணியும், நாளை, ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின், நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெறும். நாளை மறுநாள், இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவில், 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி மற்றும் பக்தி இன்னிசையும் நடைபெறும்.