உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு உற்சாகம் களை கட்டிய கிராமங்கள்

ஆடிப்பெருக்கு உற்சாகம் களை கட்டிய கிராமங்கள்

உடுமலை:வேளாண்மை செழிக்க உதவும் நீர் நிலைகளுக்கு நன்றி சொல்லும், ஆடி 18 கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைக்க, விவசாயிகள் இருப்பு வைத்திருந்த விதைகளில், முளைப்பாரிகள் இட்டு, விரதம் துவங்கினர். ஆடிப்பெருக்கு தினமான நேற்று, முளைப்பாரிகளை எடுத்து வந்து, அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராமங்களில் கொண்டாடப்பட்டது. முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, ஆற்றின் படித்துறைகளில் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, விவசாயம் செழிக்க வழிபட்டனர். ஆடிப்பெருக்கு அன்று, கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றினர். கன்னி பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக, நீரில் விளையாடியும், பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடியும், ஒற்றுமைத் திருவிழாவாக நேற்று கொண்டாடினர். ஆடிக்காற்றை கொண்டாடும் வகையில், கிராமங்களிலுள்ள மரங்களில் துாரிகள் அமைத்து, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடினர். உடுமலை அருகேயுள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டாள் அருள்பாலித்தார்.பூமிலட்சுமி அம்மனுக்கும் அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோவில் மற்றும் பிரசன்ன விநாயகர் கோவில்களில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிவெள்ளி சிறப்பு அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !