காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு : 10 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சி வெள்ளம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரி கரையோரங்களில் நேற்று, பல லட்சம் மக்கள் புனித நீராடி, வழிபட்டனர். காவிரி பாயும் மாவட்டங்கள் திருவிழா கோலம் பூண்டன. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால், ஆடி மாதம், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், தட்சிணயான புண்ணிய நதி என்ற பெருமை, காவிரிக்கு உண்டு.
புனித நீராடல் : பாரத போர் ஆடி, 1ல் துவங்கி, ஆடி, 18ல் நிறைவுற்றது. போரில் வென்ற பாண்டவர்கள், போர் கருவிகளை காவிரியில் சுத்தம் செய்து, புனித நீராடியதாகவும், வெற்றி பெற்ற வீரர்களை, காவிரியில் நீராட வைத்து, அவர்கள் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து சென்றதாகவும், புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவுகூரும் வகையில், காவிரி உள்ளிட்ட நதிக் கரைகளில், ஆண்டுதோறும், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 2007ல், ஆடிப்பெருக்கு நாளில் நிரம்பி வழிந்த மேட்டூர் அணை, 10 ஆண்டுகளுக்கு பின் நேற்று நிரம்பியிருந்தது. நேற்று லட்சக்கணக்கான மக்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியில், புனித நீராடி வழிபாடு செய்தனர். புதுமண தம்பதியர், மண மாலைகளை தண்ணீரில் விட்டு, காவிரி தாயை வழிபட்டனர். அணை அடிவாரம் முனியப்பன் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். வினாடிக்கு, 900 கன அடியாக இருந்த மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் நீர் திறப்பு, நேற்று ஒரு நாள் மட்டும், 300 கன அடியாக குறைக்கப்பட்டதால், பொதுமக்கள், பக்தர்கள் அச்சமின்றி, கால்வாயில் இறங்கி நீராடினர்.
ஈரோடு மாவட்டம், பவானி, சங்கமேஸ்வரர் கோவில், கூடுதுறை, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பரிகார தலமாக உள்ளது. ஆடிப்பெருக்கு தினமான நேற்று, இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.இதேபோல, கோபி, கொடிவேரி தடுப்பணைக்கு, நேற்று அதிகாலை முதலே, மக்கள் வரத் தொடங்கினர். தடுப்பணையில் இருந்து, அருவியாக கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.