உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஆடி கிருத்திகை விழா: 11/2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி ஆடி கிருத்திகை விழா: 11/2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவில், ஒன்றரை லட்சம் பக்தர்கள், முருகப் பெருமானை தரிசித்தனர். காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஐந்து மணி நேரம், பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, 3ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப் பரணியும், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. 1 லட்சம் காவடிகள் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவர் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, திருப்பதி திருமலையில் இருந்து, கோவில் செயல் அலுவலர், அணில்குமார்சிங்கால், மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, 13வது முறையாக, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர். அப்போது, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து மூலவரை தரிசித்த பின், பட்டு வஸ்திரத்தை சண்முகப்பெருமானுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பதி கோவில் அதிகாரிகளுக்கு பிரசாதங்கள் கொடுத்தனர்.

முதல் நாள் தெப்பம்: ஆடிக்கிருத்திகை விழாவில், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடிவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். மொத்தத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை, ஒன்றரை லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று இரவு, முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. மாலை, 6:30 மணிக்கு உற்சவர் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணபொய்கைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில் உற்சவர் பெருமான் குளத்தை, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

கண்காட்சி: இதில், 18 துறை சார்பில், தங்களது துறையில் உள்ள அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி மக்களுக்கு கூறுவர். மேலும் கண்காட்சியும் அமைப்பர். அந்த வகையில், நேற்று, திருத்தணி சன்னதி தெரு தணிகேசன் திருமண மண்டபத்தில் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, தாசில்தார் செங்கலா, சுகாதார துறை இணை இயக்குனர் (குடும்ப நலம்) இளங்கோ உட்பட, பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில், வேளாண், கால்நடை, துாய்மை பாரத இயக்கம், சமூக நலம், குடும்ப நலம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு உட்பட, 12க்கும் மேற்பட்ட துறையினர் கண்காட்சி அமைத்திருந்தனர். இந்த கண்காட்சி, நாளை வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !